animal husbandry
பறவை இனங்கள் :: வான்கோழி வளர்ப்பு :: நோய் பராமரிப்பு முதல் பக்கம்

வான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்

வான்கோழிகளைப் பராமரிக்கும் முறைகளில ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது அவற்றின் உடல்களில் எதிர்ப்புச் சக்தி குறைந்தாலோ நோய்கள் அதிக அளவில் தாக்குகின்றன. ஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு, கோழிகளைக் காட்டிலும் அதிக நோய் எதிர்ப்புச் சக்திக் கொண்டவை. உதாரணமா நச்சுயிரி நோய்களான மேரக்ஸ் நோய் மற்றும் சிறு மூச்சுக் குழல் நோய், வான்கோழிகளைப் பெருமளவில் தாக்குவதில்லை. இராணிக்கெட், கோழி அம்மை மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இரத்தக் கழிச்சல் நோய் வான்கோழிகளைக் குறைந்த அளவிலேயே தாக்குகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பினும், சில வகை நோய்களிலிருந்து வான்கோழிகளால் தப்ப முடிவதில்லை. குறிப்பாகக் கோழிக் காலரா, கோழி, டைபாய்டு, மைகோபிளாஸ்மா, நீலக் கொண்டை, கருப்புத்தலை, ஏரிசிபிலஸ் மற்றும் குடற்புழுக்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்.

நோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்

எந்தவகை நோயாக இருப்பினும், நோய் தாக்கப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், சுறுசுறுப்பில்லாமலும், தீவனம் உட்கொள்ளாமலும், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும். இவைகள் பொதுவான அறிகுறிகள்.

ஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படும் போது, அவற்றின் தன்மைக்குத் தகுந்தாற்போல் அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படும் போது, மூக்கிலிருந்து சளி ஒழுகிக் கொண்டும், கண்கள் வீங்கியும், நீர் வடிந்து கொண்டும் இருக்கும். ஆனால், உணவுக் குழாய் சம்பந்தமான நோய்களால் அல்லது குடற்புழுக்களினால் பாதிக்கப்பட்டிருப்பின், வான்கோழிகளின் எச்சம் வழக்கத்தை விடக் கழிச்சலாகவோ அல்லது இரத்தம் கலந்தோ அல்லது வேறு நிறுத்துனோ காணப்படும். அதே சமயம் வெளிப்புற ஒட்டுண்ணிகள் அதிக அளவில் வான்கோழிகளைத் தாக்கும் போது, அவற்றின் இறகுகள் பளபளப்பின்றி வறண்டும், தத்தம் அலகுகளினால் இறக்கைப் பகுதிகளையும், உடலையும் அடிக்கடி தேய்த்து விட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம். சிலநேரங்களில், இந்த ஒட்டுண்ணிகள் இறகுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம்.

இளம் வான்கோழிக் குஞ்சுகளைப் பொறுத்தவரையில், எந்த ஒரு நோயினால் பாதிக்கப்படும் போதும், போதிய அளவு வெப்பம் இருந்தாலும் ஒன்றொடொன்று, கூட்டமாக மோதிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

இராணிக்கெட் நோய்

நச்சுயிரி (வைரஸ்) கிருமியினால் உண்டாகும் இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள், வெள்ளை நிறத்தில் எச்சமிடுவதால், இது வெள்ளைக் கழிச்சல் நோய் எனவும் கூறப்படுகிறது. முட்டையிடும் பருவத்தில் இருக்கும் வான்கோழிகள் பாதிக்கப்படும் போது முட்டையின் தரம் குறைவதுடன் அவைகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் குறைந்து விடுகின்றது. அதிக எண்ணிக்கையில் இறப்பும் ஏற்படும். மீதமுள்ள பிழைத்த முட்டையிடும் வான் கோழிகள் சுமார் நான்கு வாரங்களுக்குப் பின், பழைய எண்ணிக்கையை அடைந்து விடும். அத்துடன், லேசான சுவாசக் கோளாறுகளுக்கான அறிகுறிகளும் தென்படும். தேவையான தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இந்நோயிலிருந்து கோழிகளைக் காப்பாற்றலாம்.

அம்மை நோய்

இது வான்கோழிகளை அதிகமாகப் பாதிக்கும் நோயாகும். ஒரு வகை நச்சுயிரியால் ஏற்படும் இந்நோய். கோழி அம்மை வகையைச் சார்ந்தது. பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் மூக்கு, வாய், தலை, கண், இமை ஆகிய பகுதிகளில் கொப்புளங்கள் போன்று கட்டிகள் தோன்றும். தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். இருப்பினும், கோழிகளைப் போல் நோய் எதிர்ப்பு சக்தியானது நீண்ட நாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை. மேலும் 3 அல்லது 4 மாத இடைவெளியில் மீண்டும் தடுப்பூசி போடுவதன் மூலம் நோய்த் தாக்குவதைத் தடுக்கலாம். நோய் வந்த பின் போரிக் களிம்பை வேப்பெண்ணையில் கலந்து கொப்புளங்களில் தடவலாம்.

மூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை

நச்சுயிரியால் உண்டாகும் இந்த நோய், இளம் வான்கோழிக் குஞ்சுகளையே அதிகம் தாக்கக்கூடியது. மூக்கின் உட்பகுதியில் உள்ள எலும்புப் பகுதி பாதிக்கப்படுவதுடன் மூக்கின் சுவாசப் பாதை முழுவதும் சளி அடைத்துக் கொள்வதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்படட வான்கோழிகளில் சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை, இத்துடன் எச்செரிச்சியா கோலை என்னும் பாக்டீரியா கிருமிகள் சேர்ந்து தாக்கும் போது, மூக்கில் இருக்கும் சளியானது சீழ்போன்று மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அத்துடன், கல்லீரலும், இதயமும் வீக்கத்துடன் இருப்பதையும் காணலாம்.

எரிசிபெலஸ்

இந்நோயினால் பாதிக்கப்பட்ட 13 வார வயதுக்கு மேற்பட்ட வான்கோழிகளின் தலைப்பகுதியின் தோளில் சொறி போன்ற புண்கள் ஏற்படும். தலையின் மீது இருக்கும் சிறிய சதைப் பகுதி வீங்கிக் காணப்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆண் வான்கோழிகளின் விந்திலுள்ள உயிரணுக்கள், கருவுறச் செய்யும் தன்மையை இழந்து விடுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளுக்கு, பென்சிலின் போன்ற உயிர்க்கொல்லி மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம்.

கோழிக் காலரா

பாஸ்சுரெல்லா மல்டோசிடா என்னும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் இந்த நோய், பத்து வாரங்களுக்கு மேற்பட்ட வான்கோழிகளையே அதிக அளவில் தாக்கும். அப்போது, 50 சதவிகிதத்திற்கு மேலாக இறப்பு நேரிடும். பாதிக்கப்பட்ட வான்கோழிகளுக்கு நுரையீரல் பாதிப்பினால் சளிக்காய்ச்சல்  ஏற்படும்.

மேலும், நோய்வாய்ப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், தீனி எடுத்துக் கொள்ளாமலும், மூக்கு மற்றும் கண்ணிலிருந்து நிர் வடிந்து கொண்டும் இருக்கும். துர்நாற்றத்துடன் கூடிய கழிச்சலும் ஏற்படும். நாள்பட்ட நோயாக இருப்பின் மூச்சுத் திணறல், கால் நொண்டுதல், கழுத்து திருகிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகளும் தென்படும்.

இறப்பறிசோதனை மேற்கொள்ளும் போது உடல் பகுதி முழுவதும் அதிக அளவில் சிவந்து இருப்பதுடன் உள்ளுறுப்புகள் அனைத்தும் இரத்தப் புள்ளிகளுடன் காணப்படும். குறிப்பாக, கல்லீரலின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு வெள்ளை நிறப்புள்ளிகளாகத் தோன்றும்.

கோழி டைபாய்டு

சால்மொனெல்லா கேலினேரம் எனும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் இந்நோய் குறிப்பாக வளரும் மற்றும் வளர்ந்த நிலையிலுள்ள வான்கோழிகளைத் தாக்கும். தீவனம் உண்ணாமை, சோர்வு, குறவைாக முட்டையிடுதல் போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்பட்டாலும், நீர்த்த மற்றும் சளிக் கலந்தாற்போன்ற எச்சமே இந்த நோய்க்கான முக்கியமான நோய் அறிகுறியாகும். இந்த இளங்குஞ்சுகள் பாதிக்கப்படும் போது, மஞ்சள் நிறத்தில் எச்சம் காணப்படும். இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, உடல் பகுதிகள் மஞ்சள் நிறத்துடனும், குறிப்பாகக் கல்லீரல் கருமைக் கலந்த சிவப்பில் மினுமினுப்பாகக் காணப்படும்.

சுவாச நோய்கள்

கொரைசா என்றழைக்கப்படும் இந்நோய் போர்ட்டெல்லா ஏவியம் என்னும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் கண்கள் சிவந்தும், மூக்கில் நீர்வடிந்து கொண்டும் காணப்படும். அவைகள் மூச்சு விடும் போது இலேசான இரைச்சல் ஏற்படும். இறந்த கோழிகளில் இறப்பறி சோதனை மேற்கொள்ளும் போது, மூக்கின் துவாரங்களில் சளி அடைத்துக் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காணலாம். சுமார் 5 வார வயதுடைய கோழிகள் அதிக அளவில்  பாதிக்கப்படுகின்றன. இருப்பினும், முட்டையிடும் தருணத்தில் இந்த நோய் காணப்படும் போது தும்மல் அதிக அளவில் ஏற்படுகிறது.

இரத்தக் கழிச்சல் நோய்

அடினோ வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படும் இந்த நோய் 35 முதல் 50 நாட்களுக்குட்பட்ட வான்கோழிகளைத் தாக்கும் . பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு இரத்தத்துடன் கூடிய கழிச்சல் ஏற்படும். அதனால் கோழிகளின் பின்பக்க இறகுகள் இரத்தம்பட்டுக் காய்ந்து இருப்பதைக் காணலாம். இரத்தப் போக்கு அதிகம் இருப்பதால், கோழிகள் அதிகம் இறப்பதற்கு வாய்ப்புண்டு. இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, இரத்தச் சோகையால் உடல் வெளிறிக் காணப்படும்.

முகவீக்க நோய்

மைக்கோப்ளாஸ்மா என்னும் கிருமிகளால் ஏற்படக்கூடிய இந்நோயானது மூக்குப் பகுதியில் காணப்படும் மென்மையான குருத்தெலும்புகளைப் பாதிக்கின்றது. அப்போது, அதிக அளவில் அப்பகுதியில் சளி கட்டிக்கொள்வதால், முகம் வீக்கமடைந்து காணப்படும். இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, கண்ணாடி போல் காட்சியளிக்க வேண்டிய காற்றுச் சவ்வானது சற்றே அழுக்கடைந்த நுரையுடன் காணப்படும். இந்நோயானது, மேலும் நாள்படும் போது காற்றுச் சவ்வுகளில் மாவு போன்ற பொருட்கள் ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இதுவே, இந்நோய்க்கான முக்கிய அறிகுறியாகும். மேலும் காலில் மூட்டுகளும் பாதிக்கப்பட்டு நீர் கோர்த்துக் கொள்ளும்.

பூஞ்சை நோய்கள்

அஃப்ளோ நச்சு என்பது, ஒரு வகைப் பூஞ்சைக் காளானிலிருந்து உற்பத்தியாகக் கூடியது. கல்லீரலையே குறியாக வைத்துத் தாக்கக்கூடிய இந்த நச்சினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், தீனி எடுத்துக் கொள்ளாமலும், இறக்கைகள் தளர்ந்தும் காணப்படும். மேலும், இறந்த வான்கோழிகளைப் பிரேத இறப்பறிசோதனை செய்து பார்த்தால், உடல்பகுதி முழுவதும் சிவந்து வீக்கத்துடன் இருப்பது தெரியவரும். கல்லீரல் அளவில்  பெருத்தும் சற்று தொட்டுப் பார்த்தால் கடினமாகவும் இருக்கும்.

கருப்புத்தலை நோய்

இந்து நோய் ஹிஸ்டோமோனாஸ் மெலியாகிரிடிஸ் எனும் ஓரணு உயிரணுவால் ஏற்படக்கூடியது. இக்கிருமிகள், குடல் மட்டும் ஈரலை, கடுமையாகப் பாதிப்பதால், இரண்டு அல்லது மூன்று நாட்களில் வான்கோழிகள் அதிக அளவில் இறந்து விடும். அவைகள் மஞ்சள் நிறத்தில் எச்சமிடும். இந்நோய், உருண்டைப் புழுவின் முட்டைகளின் மூலமாகத் தீவனத்துடன் கலந்து, வயிற்றை அடைந்து நோயை உண்டாக்குகிறது. ஆகவே, இந்நோய் வராமல் தடுக்க முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுத்து வரவேண்டும்.

இரைப்பை வீங்கித் தொங்குதல்

இரைப்பை தளர்ச்சியுறுவதே இவ்வகை நோய் ஏற்படுவதற்குக் காரணம். குறிப்பிட்ட சில வகையைச் சார்ந்த வான்கோழிகளிடையே இது பரம்பரை நோயாகக் காணப்படுகிறது. ஆனால் கடும் வெயில் காலங்களில் போதுமான அளவு தண்ணீர் கொடுக்காதிருப்பதே மிக முக்கியக் காரணம் ஆகும். இச்சமயத்தில், வான்கோழியின் இரைப்பை பெரிய கால்பந்து அளவில் கூட வீங்கி விடும். இது போன்ற நோயுள்ள வான்கோழி இடும் முட்டைகளையோ அல்லது ஆண்  வான் கோழிகளால் அணைந்து கிடைக்கும் முட்டைகளையோ அடை வைத்துப் பொரிக்காமல் இருப்பது நல்லது.

நீலக்கொண்டை நோய்

கரோனா எனும் நச்சுயிரியால் ஏற்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளின் தலைப்பகுதியும், தோல் பகுதியும் கருப்பு நிறத்தில் மாறிவிடும். பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகள் சோர்வுடன் தீவனம் உண்ணாமல் இருக்கும். பச்சை நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் எச்சமிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளுடன் வைட்டமின்கள், தாது உப்புகள் கலந்து அளிக்கவேண்டும்.

வான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்

  1. அனைத்துத் தடுப்பூசிகளையும் உரிய காலத்தில் போடவேண்டும்.
  2. தரமான குஞ்சுகளைச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்கவேண்டும்.
  3. வான்கோழிகளைப் பராமரிக்கும் இடம், தண்ணீர் தேங்காத பகுதியாக இருக்கவேண்டும்.
  4. நோய் தாக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து, வான்கோழிக் குஞ்சுகளை வாங்கக்கூடாது.
  5. பண்ணைகளை எலித் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கவேண்டும்.
  6. குடற்புழு நீக்க மருந்தை மாதம் ஒரு முறை கொடுப்பதன் மூலம் அக உண்ணிகளையும், தக்க மருந்து கலந்த நீரில் வான்கோழிகளை நனைத்து எடுப்பதன் மூலம் புற உண்ணிகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.
  7. சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனத்தை அளிக்கவேண்டும்.
  8. இறந்து போன வான்கோழிகளையோ, குஞ்சு பொரித்த முட்டைகளையோ உடனுக்குடன் அப்புறப்படுத்தி புதைத்தோ அல்லது எரித்தோ விடவேண்டும்.
  9. நோய்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட ஆரம்பித்தாலோ அல்லது வான்கோழிகள் ஏதேனும் இறந்து விட்டாலோ, உடனே கால்நட மருத்துவரை அணுகி இறந்த வான்கோழிகளை இறப்பறிசோதனை செய்து எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மற்றக் கோழிகளுக்கு அந்நோய் பரவாத வண்ணம் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும்.
  10. வான்கோழிகளை விற்பனை செய்தபின், ஒவ்வொரு முறையும் ஆழ்கூளம், எச்சம் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி பண்ணையை, கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  11. அந்தந்தப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்களுக்குத் தகுந்தவாறு தடுப்பூசி போட்டு, வான்கோழிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

குறிப்பாக, இராணிக்கெட் நோய்க்கான லசோட்டா அல்லது ஆர்டிஎப் தடுப்பூசியை 2-7 நாட்களில் கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டும், ஆர்டிவிகே என்னும் தடுப்பூசியை 8வது வாரத்தில், இறக்கையில் ஊசி மூலமும் அளிக்கவேண்டும். அதே போல், அம்மை நோய்க்காக, எப்பிவி என்னும் தடுப்பு மருந்தை இறக்கையில் ஊசி மூலம் 2-3 வது வார வயதில் கொடுக்கவேண்டும்.

மேலே கூறியவாறு சரியான நேரத்தில் நோய்க்கான காரணங்கைளக் கண்டறிவதன் மூலம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் வான்கோழிகளை நோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து இலாபகரமான முறையில் பண்ணைத் தொழிலை மேற்கொள்ளலாம்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15